×

தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்டவே முடியாது: தமிழக குழுவிடம் ஒன்றிய அமைச்சர் ஷெகாவத் உறுதி

புதுடெல்லி: தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட முடியாது என டெல்லி சென்ற தமிழக குழுவிடம் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதி அளித்துள்ளார். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் கர்நாடகா அரசின் கோரிக்கையை ஏற்று, மேகதாதுவில் இம்மாநிலம் அணை கட்டுவது குறித்து விவாதிக்கப்படும் என ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் சமீபத்தில் அறிவித்தார். இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சி குழு நேற்று பிற்பகல் டெல்லியில் உள்ள ஜல்சக்தி பவனில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்தது.
இக்குழுவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். பழனி மாணிக்கம், தம்பித்துரை கு.செல்வப் பெருந்தகை, கோ.க.மணி, வைகோ, எஸ்.எஸ்.பாலாஜி, நயினார் நாகேந்திரன், இராமசந்திரன், பி.சண்முகம், எம்.எச்.ஜவஹிருல்லா, தி.வேல்முருகன், ஏ.கே.பி.சின்ராஜ், எம்.ஜெகன்மூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் தலைமை உள்ளுறை ஆணையர் அதுல்ய மிஸ்ரா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா, உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி, காவேரி தொழில் நுட்ப குழு மற்றும் பன்மாநில நதிநீர் பிரிவு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர்இடம் பெற்றனர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், ‘ஒன்றிய அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. மேகதாது அணை விவகாரம் குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என அவரிடம் வலியுறுத்தினோம். அது குறித்து விவாதிக்க ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் எங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அடுத்த கூட்டத்தில் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார். அதே நேரம், மேகதாதுவில் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகாவால் காவிரியின் குறுக்கே மேகதாது உட்பட எந்த புதிய அணையையும் கட்ட முடியாது என்று அவர் திட்டவட்டமாக உறுதியளித்து இருக்கிறார். இது, தமிழகத்திற்கு மிகவும் சாதகமான ஒன்றாக அமைந்துள்ளது. அடுத்த காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கப்பட்டால் தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும்,’ என்று தெரிவித்தார்.

* கர்நாடகா அரசின் விண்ணப்பம் நீக்கம்
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கேட்டும், அணை கட்டுமானத்துக்கான திட்ட அறிக்கையையும் கடந்த 2019ம் ஆண்டு ஜூனில் ஒன்றிய அரசிடம் கர்நாடகா அரசு விண்ணப்பம் அளித்திருந்தது. அதனை பரிசீலனை செய்த ஒன்றிய அரசு, திட்ட அறிக்கை முழுமையாக இல்லை என அப்போது தெரிவித்தது. இந்நிலையில், ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மேகதாது விவகாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி கேட்ட கர்நாடகாவின் திட்ட அறிக்கையை ஒன்றிய வனத்துறை மற்றும் காவிரி ஆணையம் இறுதி செய்யவில்லை. சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு கர்நாடக அரசு வழங்கிய விண்ணப்பம் ஒன்றிய அரசின் பரிசீலனையில் இருந்து நீக்கப்படுகிறது,’ என கூறப்பட்டுள்ளது.

* தமிழக தலைவர்கள் திருப்தி
தமிழக அனைத்து கட்சி குழுவில் இடம் பெற்ற தலைவர்கள் கூறிய கருத்துகள் வருமாறு: வைகோ (மதிமுக): தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது என்றும், இந்த விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு பின்னால் இருந்து இயக்கவில்லை என்றும்  ஒன்றிய அமைச்சர் ஷெகாவத் உறுதியளித்துள்ளார்

ஜி.கே.மணி (பாமக): தமிழகமும், கர்நாடகவும் அண்டை மாநிலங்கள் என்பதால், தமிழகத்தின் உரிமையை காக்கும் பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது. மேகதாதுவில் தமிழகத்தின் அனுமதி இல்லாமல் அணை கட்டப்படாது என ஒன்றிய அமைச்சர் கூறிய வார்த்தையின் மீது நம்பிக்கை வந்துள்ளது.

தம்பிதுரை (அதிமுக): பெங்களூருக்கு குடிநீர் தேவை என்றால் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து நீரை எடுத்துக் கொள்ளலாம். காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டித்தான் தண்ணீர் எடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

வேல்முருகன் (தவாக) : ஒன்றிய அமைச்சரின் உறுதிமொழியை மீறி, மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முற்பட்டால் லட்சக்கணக்கான மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

நயினார் நாகேந்திரன் (பாஜ): தமிழக பா.ஜவும் தமிழக மக்களின் நலன் கருதி காவிரியில் மேகதாது அணை கட்டக் கூடாது என்பதற்காக கையொழுத்து போட்டு கொடுத்துள்ளோம்.

தி.ராமச்சந்திரன் (சிபிஐ): ஒன்றிய அமைச்சரின் உறுதிமொழி திருப்தி அளிக்கிறது. இதையும் மீறி கர்நாடகா அணை கட்ட முற்பட்டால், தமிழத்தில் உள்ள  அனைத்து கட்சிகளும் இணைந்து அதை தடுக்கும்.

எம்.எச்.ஜவஹிருல்லா (மனிநேய மக்கள் கட்சி): காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேகதாது குறித்து விவாதிக்க முடியாது. அதற்கு வரம்பு இல்லை என்பதை ஒன்றிய அமைச்சரிடம் எடுத்துரைத்தோம்.

எஸ்.எஸ்.பாலாஜி (விசிக): மேகதாது அணை தொடர்பாக ஒன்றிய அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது.

சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூ.): காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தர் பாராபட்சமாக நடந்து கொள்கிறார். அவரை மாற்ற வேண்டும்.

Tags : Megha Dadu ,Tamil Nadu government ,Union Minister ,Shekhawat ,Tamil Nadu , No dam can be built in Megha Dadu without the approval of the Tamil Nadu government: Union Minister Shekhawat assures Tamil Nadu committee
× RELATED அயலக தமிழர் நல வாரியம் மூலம் வெளிநாடு,...